Friday, December 10, 2021

கத்திரி

இதுக்கெல்லாம் நேரம் காலம் பார்க்க முடியுமா? வீட்டுல எல்லாரும் தூங்குற நேரம் தான் நல்ல நேரம். என்ன செய்யவேண்டும் என்று ராஜி ஏற்கனவே நுணுக்கமாக திட்ட மிட்டிருந்தாள். எந்த கத்திரிக்கோல் இந்த காரியத்துக்கு உதவும், எங்கே போய் இதை செய்தால் குறைந்த தடயம் இருக்கும் என்றெல்லாம் ஏற்கனவே யோசித்து வைத்திருந்தாள். 

அன்று பரிட்சை முடிந்த கடைசி நாள், அரை நாள் தான் பள்ளிக்கூடம். பிரண்ட்ஸ் எல்லோருக்கும் டாடா சொல்லிவிட்டு, வீட்டுக்கு வந்து, பாட்டி செஞ்சி வெச்சிருந்த சாம்பார் சாதத்தை அவசர அவசரமாய் அள்ளி போட்டுக்கொண்டு, பாட்டியையும், அம்மாவையும், சித்தியையும் "ஏன் இன்னும் தூங்க போகலை?" என்று மறுபடியும்-மறுபடியும் நச்சரித்து, வீடு மொத்தமும் ஒரு வழியாக ஓய்ந்து அடங்கி, மதிய மயக்கம் அடைந்ததும், ராஜி அவசர-அவசரமாக தையல் பெட்டியில் இருந்த கத்திரிக்கோலை ஓசைப்படாமல் எடுத்து, பாவாடையில் ஒளித்து மொட்டை மாடிக்கு கொண்டு வந்தாள். 


கயிறு போல் தொங்கிய இரட்டைப்பின்னலை கையால் வருடி நீளம் கணக்கிட்டாள். பின் மெல்ல கத்திரியால் ரிப்பன் கட்டிய நுனியை வெட்டினாள். 'சருக்-சருக்' என்ற சத்தம் ஏனோ அவளுக்கு இனிமையாகப்பட்டது. சுட்டெரிக்கும் வெய்யில் ஏனோ சட்டென இதமாகப்பட்டது. 


இனி வரும் காலத்தில் "நீ அம்மாபாளையா? பொம்பளையா?" என்றெல்லாம் கிண்டல் அடிப்பார்கள். அதெல்லாம் அப்புறம், இன்று ராஜி மெல்ல மெல்ல தான் யார் என்ற தேடலை தொடங்கினாள்.